உள்ளாட்சி தேர்தலில் எந்தவித பிரச்சினையுமின்றி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

பயிற்சி வகுப்பு


காவேரிப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், துணை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ஓச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. தேர்தல் பார்வையாளர் வி.சாந்தா மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-


பிரச்சினையின்றி


வெளிப்படைத்தன்மையுடன் பணிபுரிய வேண்டும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குபதிவுக்கு தேவையான படிவங்களை பூர்த்தி செய்து வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் பணியை எளிதாக்கிக் கொள்ள வேண்டும். பணிகள் அனைத்தையும் முறையாக முன்கூட்டியே தயார்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு குறித்த எவ்வித சந்தேகம் இருந்தாலும் இந்த பயிற்சி வகுப்பில் நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

மண்டல அலுவலர்களிடம் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வாக்குபெட்டிகளை கையாள்வதை முறையாக தெரிந்துகொள்ள வேண்டும். பயிற்சி பெறும் அலுவலர்கள் அடுத்த பயிற்சி வகுப்பில் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி வழங்க வேண்டும். அந்த வகையில் தங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொண்டு வாக்குப்பதிவை எந்தவித பிரச்சினைகளும் இன்றி நடத்திட அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கென்னடி, சீனிவாசன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.