சோளிங்கர் அடுத்த தளவாய்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் ( 30 ) , விவசாயி . இவரது மனைவி திலகா ( 25 ) , நிறைமாத கர்ப்பிணி . இவர்கள் இருவரும் தங்களது நிலத்தில் அறுவடை செய்த வேர்க்கடலையை எடுத்துக்கொண்டு நேற்று இரு சக்கர வாகனத்தில் தளவாய்பட்டறையில் இருந்து பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர் .

மேல்வெங்கடாபுரம் கூட்டு சாலையை கடக்க முயன்றபோது , வாலாஜாவிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர் பாராத விதமாக மோதியது . இதில் தங்கராஜ் தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்தார் . மேலும் , திலகா இரு சக்கர வாகனத்தோடு லாரியின் முன் பகுதியில் சிக்கியதில் கை மற்றும் கால்கள் நசுங்கி படுகாயமடைந்தார் . 

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த திலகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . 

இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் லாரியை பறிமுதல் செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர் .