புரட்டாசியில் மாதத்தில் வரும் 
அமாவாசை நாள் மஹாளய அமாவாஸ்யை என்று அழைக்கப்படுகிறது. 
புரட்டாசி அமாவாஸ்யைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாஸ்யைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். 

அதாவது புரட்டாசி அமாவாஸ்யைக்கு முன்னர் வருகின்ற பௌர்ணமிக்கு மறுநாள் ஆன ப்ரதமை திதி முதல் இந்த மஹாளய பட்சம் என்பது துவங்கும். 

மகாளய பக்ஷம் அதாவது இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காணவரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.

இந்த 15 நாட்களும் சுப நிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 

15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாஸ்யை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். 

இதற்கு மஹாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.

தானதர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றார். அங்கே அவர் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலைமலையாகக் கிடைத்தது. 

ஆனால், அவருக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் - அவர் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பெற்றவர்கள் யார் என்று அறிந்திராத காரணத்தால் தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களைத் தீர்க்கும் வகையில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாஸ்யை அதற்கு மறுநாள் ஆன ப்ரதமையையும் சேர்த்து மொத்தம் 16 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

மஹாளய பட்சத்தின் எல்லா நாட்களிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்வோரும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் பிரதமை முதல் துவங்கி அமாவாஸ்யைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை வரை 16 நாட்கள் கடைபிடிப்பார்கள். 

அதாவது நமது இல்லத்திற்கு வந்து அமாவாஸ்யை நாள் வரை தங்கியிருந்த பித்ருக்களை அதற்கு மறுநாள் ஆன பிரதமை நாள் அன்று சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் செய்து பித்ருலோகத்திற்கு வழியனுப்பி வைப்பது நம் கடமை.

இந்த மஹாளய பட்சத்தின் எல்லா நாட்களுமே பித்ருக்களுக்கு உகந்தவை என்றாலும் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களும் உண்டு. மஹாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, ஸன்யஸ்த மஹாளயம், கஜச்சாயை, சஸ்திரஹத மஹாளயம் என்று ஒருசில நாட்களை பஞ்சாங்கத்தில் பளிச்சென்று குறிப்பிட்டிருப்பார்கள். 

பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதை எமதர்மராஜன்.

பித்ரு லோகத்திற்கு அதிபதி ஆகிய எமதர்மராஜனின் ஜென்ம நட்சத்திரம் மஹாளய பட்சத்தில் இணைகின்ற நாள் மஹாபரணி என்று அழைக்கப்படுகிறது. 

அந்த நாளில் சிரார்த்தம் செய்யும் போது பித்ருலோகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடைகின்றன. 

பரம்பரையில் எவரேனும் சந்நியாசம் போயிருந்தால் அவர்களுக்கு உரிய நாள் ஆக ஸன்யஸ்த மஹாளயம் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

இது த்வாதசி திதி அன்று வரும். அன்றைய தினம் சிரார்த்தம் செய்யும்போது சந்யாசிகள் த்ருப்தி அடைகிறார்கள். 

ஆயுதத்தால் மரணம், விபத்தினால் மரணம் அல்லது தற்கொலை முதலான துர்மரணத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சதுர்த்தசி திதி அன்று வருகின்ற சஸ்திரஹத மஹாளய நாள் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது.

‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இந்த வாக்கியத்தை பலரும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

அதாவது தனது தாய் அல்லது தந்தைக்கு பிரதி வருடந்தோறும் வருகின்ற சிரார்த்தத்தை செய்யாமல் மறந்து போனவர்கள் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டால் போதும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறு, 

பெற்றோர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் இறந்த திதி அன்று கண்டிப்பாக சிரார்த்தம் செய்ய வேண்டும்.

மஹாளய பட்ச நாட்களில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, தகப்பனின் மற்றொரு மனைவியான ஸபத்னீ மாதா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன் (தாயின் சகோதரர்), மாமி (தாயின் சகோதரனின் மனைவி), தகப்பனின் சகோதரியான அத்தை, அவரது கணவர், தாயின் சகோதரியான சித்தி, அவரது கணவர், தன்னுடன் பிறந்த சகோதரன், அவரது மனைவி, உடன்பிறந்த சகோதரி, அவளது கணவர், தனது மனைவி, அவளது குடும்பத்தினரான மாமனார், மாமியார், மச்சினன், தான் பெற்ற பிள்ளை, மருமகள், தான் பெற்ற பெண், மாப்பிள்ளை, ஆசிரியர், சிஷ்யன், தன்னுடைய முதலாளி ஆகிய எஜமானன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இவர்களை காருணீக பித்ருக்கள் என்று அழைப்பார்கள். 

இந்த காருணீக பித்ருக்களின் வீட்டில் ஒரு நாள் அல்லது ஒரு வேளையாவது அவர்கள் கையினால் உணவு உண்டிருப்போம். 

ஒருவாய் தண்ணீராவது வாங்கிக் குடித்திருப்போம். 

இவர்களை நாம் பெரும்பாலும் மறந்துபோய்விடுகிறோம். 

இவர்களையும் நினைத்து சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் செய்வதையே மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு என்ற முதுமொழிக்கான உண்மையான பொருள் ஆகும்.

பிரதி மாதம் வருகின்ற அமாவாஸ்யை என்பது சூர்ய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். 

பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும் போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாஸ்யை. 

பிற மாதங்களில் வரும் அமாவாஸ்யை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.

ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். 

மஹாளய பட்சத்தில் வருகின்ற இந்த 15 நாட்களில் சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் செய்வதோடு ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் பித்ருலோகத்தில் உள்ளோர் த்ருப்தி அடைகின்றனர். 

பித்ருக்கள் த்ருப்தி அடைவதால் பூரண ஆயுள், நல்ல ஆரோக்யம், தர்மசிந்தனையுள்ள சந்ததி, அள்ள அள்ளக் குறையாத செல்வம், பூரணமான மன நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கடல் கரையோரம் செய்தால் பலன்கள் உடனே கிடைக்கும்.

அதற்கு அடுத்தபடியாக

ஆறு அடுத்தபடியாக
ஏரி அடுத்தபடியாக
குளம் அடுத்தபடியாக
கிணறு அடுத்தபடியாக
கோசாலை

தெய்வம் கொடுக்கும் வரங்களை தடுக்கும் சக்தி பித்ருக்களுக்கு உண்டு.

பித்ருக்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு நாம் தானே செய்ய வேண்டும்.