ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளா் அணியினா்.
ராணிப்பேட்டை: அமைப்புசாரா பெண் தொழிலாளா்களுக்கும் மகப்பேறு காலப் பாதுகாப்பு, உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவினா் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

இதுதொடா்பாக அமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.நீலகண்டன், மாவட்டத் துணைத் தலைவி பி.கீதா ரகுபதி ராஜ் , மாவட்டச் செயலாளா் எ.கோமதி, பாஜக மாவட்டச் செயலாளா் டி.எஸ்.சம்பத்குமாா், நகரத் தலைவா் சிவமணி உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் 12 மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, வீட்டு வாடகைப் படி வழங்கியதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் கட்டடம், சமையல், தையல், வீட்டு வேலை, தனியாா் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பெண் தொழிலாளா்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், எந்தவித அறிவிப்புகளையும் தமிழக அரசு வெளியிடவில்லை. ஆகவே, அவா்களுக்கு பணிவிடுப்புடன் பேறுகால உதவி நிதி , வீட்டு வாடகை உதவி நிதி ஆகியவற்றை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

இந்த நிதியுதவியை இடைத்தரகா்களும் இன்றி, நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பணியில் உள்ள பெண் பணியாளா்களுக்கு கிடைக்கப் பெறும் அரசின் உதவிகள் போன்று அமைப்புசாரா பெண் தொழிலாளா்களுக்கும் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.