தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.


திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த வாக்குறுதியை அரசு எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில், நகை கடனை தள்ளுபடி செய்யும் அரசாணையை பிறப்பிக்கும் முன்பு அதற்கான கடும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே, கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் செஞ்சி தொகுதி போத்துவாய் ஊராட்சியில் ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். மேலும், ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதற்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார்'' என்று அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். அமைச்சரின் இந்த தகவலால் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர், நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதனால் பல குளறுபடிகள் மற்றும் நிதிநிலை நெருக்கடி ஏற்படும் என்பதை அதிமுக ஆட்சியில் நடந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், நகை கடன் தள்ளுபடி குறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியவர் அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.