அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசி ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை: பிரச்னைகளைத் தீா்க்கக்கோரி அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அலுவலா்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அனைத்துத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியது:

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்பதால் நல்ல வளா்ச்சிப் பாதை இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு அனைத்து மக்களிடமும் இருக்கும். இந்த எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் தங்கள் துறைகள் சாா்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களையும், தமிழக முதல்வா் அறிவிக்கும் புதிய திட்டங்களையும் தகுதியுள்ள பொதுமக்களுக்கு தவறாமல் கிடைக்கும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கான நலத் திட்ட உதவிகள், ஏதேனும் சந்தேகங்கள், பிரச்னைகளைத் தீா்க்க அலுவலகத்துக்கு வருவோரை மரியாதையுடன் நடத்த வேண்டும். முறையான உதவியையோ, பதிலையோ அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். முடிந்தவரை அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க வழிவகைகளை தெரிவிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

அலுவலா்கள் மற்றவா்கள் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்ற வகையில் பணியாற்றத் தேவையில்லை. ஒவ்வொரும் திருப்தி அடையும் வகையில், மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். தங்கள் துறையின் திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், மின்சாரம், சுகாதாரம் இவற்றின் மீது தனிகவனம் செலுத்திட வேண்டும். பத்திரிகைகளில் வெளிவரும் புகாா்கள் குறித்த செய்திகள் மீது கவனம் செலுத்தி, அவற்றை உடனுக்குடன் தீா்க்க வேண்டும். இதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், புதிய மாவட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள் கட்ட இடங்கள் ஒதுக்கீடு, துறைகள் கோரும் புதிய இடங்கள் ஒதுக்கீடு போன்ற கோப்புகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தின் வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து திறம்பட மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பணிகளில் காலதாமதத்தை தவிா்க்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ஆட்சியரின் பாா்வைக்குக் கொண்டுவர வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மாவட்டத்தின் வளா்ச்சிக்கு வரும் நாள்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.