இந்திய ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்ட ஓலா நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் நிறுவனத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறைக்குள் குவிந்துள்ளது. ஓலா நிறுவனம் போக்குவரத்துத் துறையில் இருந்தாலும் வெறும் டிஜிட்டல் சேவை மட்டுமே அளிக்கும் நிலையில் ஆட்டோமொபைல் துறையில் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.

ஆனால் ஓலா ஸ்மார்ட்டாக யோசித்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகன பிரிவில் இறங்கியதால் குறைந்த காலகட்டத்திலேயே உற்பத்தியைத் துவங்கி தனது வாகனங்களை விற்பனை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த நிலையில் இதன் விலை அதிகமாக உள்ளதாகக் கருத்து நிலவினாலும், பெட்ரோல் விலையைப் பார்க்கும் போது எலக்ட்ரிக் வாகனங்கள் தான் பெஸ்ட் என முடிவு எடுத்துள்ளனர்.

ஒரு நொடிக்கு 4 வாகனங்கள் விற்பனை

ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர் விற்பனையை வெள்ளிக்கிழமை துவங்கிய நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ஒரு நொடிக்கு 4 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தது ஓலா.

1,100 கோடி ரூபாய்

இரண்டு நாள் முடிவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்த விற்பனை அளவீட்டை ஓலா நிறுவனம் கூட எதிர்பார்த்திராத ஒன்றாக இருக்கிறது.

நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் விற்பனை

மேலும் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வரும் நிலையில் முதல்கட்ட விற்பனையை முடிந்துள்ள நிலையில் விற்பனை பிரிவை முடக்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகை நேரத்தில் மீண்டும் விற்பனையைத் துவங்க உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.

2வது நாள் விற்பனை

முதல் நாளில் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த ஓலா நிறுவனம் 2வது நாள் முடிவில் 1,100 கோடி ரூபாய் அளவிற்கான விற்பனை செய்துள்ளதாகவும். மீண்டும் விற்பனை நவம்பர் 1ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா எங்கள் மீது வைத்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பாவிஷ் அகர்வால்


இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் ஒரு பொருள் 1,100 கோடி ரூபாய்க்கு அதுவும் 2 நாளில் விற்பனை செய்யப்பட்டது இல்லை, இதேபோல் ஆட்டோமொபைல் துறையிலும் ஓலா நிறுவனத்தின் விற்பனை அளவீடு வரலாற்று அளவாக இருக்கிறது. இது யாராலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் உண்மையாக நாம் வாழ்கிறோம் எனப் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2021 முதல் டெலிவரி

தற்போது ஓலா நிறுவனத்தில் ஸ்கூட்டர்களை வாங்கிய அனைவருக்கும் அக்டோபர் 2021 முதல் டெலிவரி செய்யப்படும், மேலும் ஓலா ஸ்கூட்டர்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 72 மணிநேரத்தில் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும் நாள் (தோராயக் கணக்கீடு) தெரிவிக்கப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா ஸ்கூட்டர் விலை

ஓலா நிறுவனத்தின் எஸ்1 ஸ்கூட்டர் விலை 99,999 ரூபாய், எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் விலை 1,29,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. மேலும் இதற்கு மத்திய அரசு அளிக்கும் FAME II மானியம் மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் மானியங்களும் உள்ளது என்பதால் இதன் விலையில் பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.


Ola's electric scooter sales crossed Rs 1,100 crore in just 2 days: Breaks E commerce sales history