ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தங்களுக்காக பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள் குழுவை நியமித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்குழு ஜிஎஸ்டி கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் பரிந்துரை வழங்குவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா, ஆந்திர பிரதேச நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத், அசாம் நிதியமைச்சர் அஜந்தா நியோக், சத்தீஸ்கர் வணிக வரித் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ, ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு நடைபெறுவதற்கான வழிகளை கண்டறிவது, வருவாய் கசிவை தடுக்க மாற்றங்களை பரிந்துரைப்பது ஆகியன இக்குழுவின் பொறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.


இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள பிடிஆர், “ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இவ்விவகாரங்கள் குறித்து பணி செய்யும்படி என்னிடமும், தமிழ்நாடு வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தியிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுமைக்கும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.