பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரி அமைப்பை மொத்தமாக நீக்கிவிட்டு சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை 2017ல் அமலாக்கம் செய்தது.
இந்த வரி விதிப்பு முறைக்கு ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவிய நிலையிலும் மத்திய அரசு அமலாக்கம் செய்யாதது.

இது மட்டும் அல்லாமல் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும் நிலையில், 4 வருடங்கள் ஆகியும் இன்னமும் விடை தெரியாமல் மக்களும், விற்பனையாளர்களும், தயாரிப்பாளர்களும் குழப்பத்தில் தான் உள்ளனர்.


சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கம் செய்யப்படும் போதும் பல வரிப் பலகை இருக்கும் காரணத்தால் மிகவும் சிறப்பானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும் எனப் பேசப்பட்டது. ஆனால் இதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது என்பது தான் இன்றைய உண்மை.


ஜிஎஸ்டி வரிப் பலகை

ஜிஎஸ்டி பிரிவில் தற்போது 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 28% + செஸ் வரி என 6 வரிப் பலகைகள் உள்ளது. அதிகப்படியான வரிப் பிரிவுகள் இருப்பது தான் தற்போது முக்கியமான பிரச்சனையாக உள்ளது எனப் பல சந்தை மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

4 வருடங்கள் ஆச்சு

உண்மையில் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களால் பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்ய முடியாதா..? ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்து 4 வருடங்கள் ஆன நிலையில் இதை மோடி தலைமையிலான மத்திய அரசும், நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் எப்போது சரி செய்யப் போகிறது.

ஜிஎஸ்டி வரி

இந்தியாவில் சரக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை HSN (6 இலக்கு யூனிபார்ம் கோடு) அடிப்படையில் தான் விதிக்கப்படுகிறது. ஆனால் பல பொருட்களில் அதன் தன்மை மாறுபடுவதால் வரி விதிப்பதில் மத்திய அரசு அதிகளவிலான பிரச்சனையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இட்லி தோசை மாவு

உதாரணமாக இட்லி தோசை மாவு மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் மட்டுமே, ஆனால் இதே இட்லி தோசை மாவை உருவாக்கும்

உலர்ந்த பவுடர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதம். இதனால் இரண்டின் விற்பனையும் விலையும் ஒன்றாகவே உள்ளது. ஒரே பொருளுக்கு எப்படி இரு வேறுபட்ட வரியை விதிக்க முடியும் என்பதே தற்போதைய கேள்வி.


வாடம் Vs பப்பட்

இதேபோல் fryums எனப்படும் வாடம்/வத்தல்/ கலர் குடல் போன்றவை மீது 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. ஆனால் இதே வட இந்தியாவில் அதிகம் சாப்பிடப்படும் papad-க்கு 0 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதேபோல் வட்ட வடிவிலான papad-க்கு 0 சதவீதம் வரி, சதுர வடிவிலான papad-க்கு அதிக வரி என நிலை இருந்தது.

ஹர்ஷா டிவீட்

இதுகுறித்து RPG எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷா தனது டிவிட்டரில் டிவீட் செய்திருந்த நிலையில், மத்தி சுங்க மற்றும் மறைமுக வரி அமைப்பு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் அனைத்து வகையான papad-க்கு 0 சதவீதம் வரி தான் என விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.


சப்பாத்தி Vs பரோட்டா

இதுமட்டும் அல்லாமல் சப்பாத்திக்கு 5 சதவீத வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2020ல் ஐடி நிறுவனம் தொடுத்த கேள்விக்கு AAR விளக்கம் கொடுத்து 5 சதவீதம் வரியின் கீழ் கொண்டு வரப்படும் void ab initio வாயிலாக அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

பால் மீதான வரியில் பிரச்சனை

இதேபோல் சாதாரணப் பால்-க்கு 0 சதவீதம் வரி, டெட்ரா பேக் பால்-க்கு 5 சதவீத வரி, இதேபோல் கன்டென்ஸ் பால்-க்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மேலும் லீஸ்-க்கும், வாடகைக்கும் மத்தியிலான ஜிஎஸ்டி வரி வித்தியாசம் மிகவும் அதிகம். இப்படிப் பல குழப்பங்கள் இருக்கும் காரணத்தால் சுமார் 4,600 வழக்குகள் நிலுவையில் உள்ளது.