ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் தரமான அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-21ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தரமான அரிசியை பொது விநியோக திட்டத்திற்கு வழங்கிவருகிறது.

மண்டலத்தில் கூடுதலாக இருப்பு உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு முறை திட்டத்தின் கீழ் இம்மாதம் 15ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை அரவை செய்து கண்டு முதல் அரிசியை ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து நேற்று முன்தினம் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தரமான அரிசியை அரவை செய்து வழங்க தங்கள் அரிசி ஆலைகளில் கலர்சார்ட்டர ( கருப்பு அரிசி நீக்கும் இயந்திரம் ) உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மேலும் , விவரங்களுக்கு வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.