ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஏரி முழு கொள்ளளவை எட்டி நேற்று உபரி நீர் வெளியேறியது.
ஆற்காடு: ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஏரி 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்துக்கு உட்பட்ட புதுப்பாடி ஏரி பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியால் சுமார் 360 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாலாற்றில் ஏற்பட்ட திடீர் நீர்வரத்து காரணமாக புதுப்பாடி ஏரிக்கான நீர்வரத்து ஏற்பட்டது.

இதற்கிடையில், புதுப்பாடி ஏரிக்கான நீர்வரத்தை நிலையாக உறுதிப் படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சிவசண்முகம் தலைமையிலான குழுவினர் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் கால்வாயை சீரமைத்து ஏரிக்கு அதிகளவில் நீரை திருப்பினர். தற்போது, ஏரி முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் நேற்று வெளியேறியது. உபரி நீர் கலவை கால்வாய் வழியாக செல்கிறது. மேலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.