தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பே இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா உச்சமடைந்த போது இருந்த நிலைமை நம்மால் மறந்துவிட முடியாது.

அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்கியத்தை தாண்டி இருந்தது.

டெங்கு பாதிப்பு

கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் டெங்கு பாதிப்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பரவிய டெங்கு காய்ச்சலில் சுமார் 50 குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மத்திய அரசு வல்லுநர்கள் உத்தரப் பிராதே பகுதியில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.


சிரோடைப் 2 டெங்கு

அதில் உருமாறிய சிரோடைப் 2 வகை டெங்கு இப்போது நாட்டில் பரவுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் உள்ள நான்கு வகையான டெங்கு பாதிப்பில் இந்த சிரோடைப் 2 வகையே பயங்கரமானது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 1970களில் முதல்முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை டெங்கு, மூளைக் காய்ச்சல் உட்படப் பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.


11 மாநிலங்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களில் இந்த டைப் 2 டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்து வரும் பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எப்படி பரவுகிறது

டெங்கு வைரஸ் நல்ல தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலமே டெங்கு வைரஸ் பரவுகிறது. இதனால் வீட்டிலுள்ள சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு அதிகம்

கடந்த ஆண்டு ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு பாதிப்பு குறைவாகவே இருந்தது. கடந்தாண்டு முழுவதும் தமிழ்நாட்டில் சுமார் 2400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதேநேரம் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மட்டும் 2600க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி சென்னையில் மட்டும் 30 பேர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல குழந்தைகள் மத்தியிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

அறிகுறிகள் என்ன

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 3 நாட்கள் கடுமையான காய்ச்சல் இருக்கும். டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் தாங்களாகவே நேரடியாக எந்தவித மருந்துகளையும் சாப்பிடக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல வீடுகளில் சுயமருத்துவ முறைகளைப் பின்பற்றுவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.