ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடைபயிற்சியின் போது நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.


ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தினமும் நடைபயிற்சி சென்று வருகிறார். வழக்கம்போல நேற்று காலையும் நடைபயிற்சி மேற்கொண்டார். ராணிப்பேட்டை நவல்பூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக அவர் சென்றார்.

அப்போது அந்தப்பகுதியில், வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குவதை நேரில் கண்டார்.

இப்பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் குப்பைகளை தெருவில் கொட்டாமல், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம்பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தினமும் வழங்கிவருவதை அறிந்த அவர் பொதுமக்களை பாராட்டினார்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை தரம்பிரித்து வாங்கி, அவற்றை வாகனங்களின் மூலம் எடுத்து சென்ற ராணிப்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுப்பிரமணி, இந்திராணி, கலா ஆகியோருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ‘செல்பி' எடுத்துக் கொண்டார்.

இது பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.