ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தி யுள்ளார். பல இடங்களில் இறந்தவர்களையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார். கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம்,
இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது. கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான பூஜை யும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழ ந்தை, மாம்பழச் சாறு நிரம்பியிருந்த அண்டா வுக்குள் எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர்.
சமையலறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது! குழந்தை மூழ்கிய அதே நேரம் ஸ்ரீ ராகவேந்திரர் பூஜைக்கு வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்து விட்டது. பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டுப் பெற்ற ஸ்ரீ ராகவேந்திரர், உள்ளே நடந்ததை அறிந்து கொண்டு விட்டார்.
பூஜை முடிந்தது. பிரசாதங்கள் வழங்கும் நேரம் வந்தது. குழந்தையை அழைத்து வரச் சொன்னார். அவர் பாதங்களில் விழச் சொல்வ தற்காக குழந்தையை தேடிப் போன பெற்றோ ர், குழந்தை அண்டாவுக்குள் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். துடித்தனர். ‘குழந்தை இறந்து விட்டதே!’ என்ற கலக்கத்தை விடவும் விஷயம் தெரிந்தால் யாரும் உணவருந்தாமல் போய் விடுவார்களே என்ற கலக்கம் அதிகமா க வருத்தியது.
குழந்தையை அப்படியே ஒரு துணியில் சுற்றி ஓரமாக வைத்தனர். பொங்கும் துக்கத்தை நெஞ்சில் புதைத்தனர். விருந்து முடியும் வரை அதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென அந்தப் பெற்றோர் முடிவு செய்தனர்.
விடுவாரா குரு மகான் குழந்தையை அழைத்து வரச் சொல்லிப் பல முறை கூறினார். பெற்றோர் தாங்க முடியாமல் உண்மையை உரைத்து அவர் காலடியில் விழுந்து கதறினர். குழந்தையைக் கொண்டு வந்து அவர் பாதங்க ளில் சமர்ப்பித்தனர்.
ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரைக் குழந்தையின் மீது தெளித்தார். கண்மூடிப் பிரார்த்தித்தார். அதிசயம் நிகழ்ந்த து அடங்கியிருந்த குழந்தையின் உடலில் அசைவு. நின்று போன இதயம் மீண்டும் இய ங்கத் துவங்கியது! குழந்தை துள்ளி எழுந்தது. கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். கிராமத் தலைவரும், அவரது மனைவியும் ராகவேந்திரர் பாதங்களில் விழுந்து நன்றியி ல் கதறினார்கள்.
'தெய்வ அம்சமே ஆனாலும், மனித வடிவெடு த்து உலகை வலம் வருபவர்களால் இவை சாத்தியமாகக் கூடுமா?' என்ற கேள்வி எழுகிறது. தெய்வ அருளின் பெருமைகளை அவ்வப்போது மக்களுக்கு உணர்த்தவும், அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை ஊட்டவுமே, இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஸ்ரீ ராகவேந்திரரே கூறியுள்ளார்.