ஆற்காடு அடுத்த திமிரி சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் ( 43 ) , அதேதெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி ( 45 ). சஞ்சிவீராயன்பேட்டை 2 வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 35 ). இவர்களது பூட்டிய வீடுகளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு மர்மநபர்கள் உடைத்து அங்கிருந்த மொத்தம் 8 சவரன் தங்க நகை, ₹ 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்ளை திருடிச்சென்றுள்ளனர்.
இதேபோல், அங்குள்ள சிவா மற்றும் மணிகண்டன் ஆகியோர் வீடுகளிலும் மர்ம கும்பல் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கூச்சலிட்டதால் மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். 
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர் . இந்நிலையில் , இந்த தொடர் திருட்டு தொடர்பாக விசாரிக்க எஸ்பி தீபா சத்யன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் 2 தனிப்படைகள் நேற்று அமைக்கப்பட்டது.

போலீசார் திருட்டு நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.