ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டீம் காட்டும் வேகம், உள்ளூர் திமுகவினரை மிரளவைத்துள்ளது.

கோவையிலிருந்து நூற்றுக்கணக்கான கட்சியினரை அழைத்து சென்று ராணிப்பேட்டையில் முகாமிட்டிருக்கும் எஸ்.பி.வேலுமணி, தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்.

இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், இப்போதே தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக கருதி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.

எஸ்.பி.வேலுமணி

கொங்கு மண்டல அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. திமுக தலைமையின் நேரடி கோபத்துக்கு ஆளாகியுள்ள இவர், கோவையை அதிமுகவின் கோட்டையாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தமாக அதிமுகவை வெற்றிபெற வைத்தவர். மிகவும் எளிய பின்னணியை கொண்ட இவர், சுறுசுறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியலுக்குள் நுழைந்தவர்.

பெரிய கூட்டம்

இன்று இவரது பின்னணியே வேறு, அது தனிக்கதை. இதனிடையே அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது வீட்டில் சோதனை நடத்திய போது தனக்காக ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டி அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி, அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தவர். இப்படி தனக்கான பலத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் இவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தாம் யார் என்பதை திமுக தலைமைக்கு காட்ட வேண்டும் என நினைக்கிறார்.

தேர்தல் பணி

இதனால் தான் தனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகாமிட்டு, அங்கு அதிமுக வேட்பாளர்களை கூண்டோடு வெற்றி பெற வைப்பதற்கான வியூகத்தை வகுத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் வாக்குகளை எப்படி சேகரிக்க வேண்டும் என்பது குறித்தும் வகுப்பு எடுத்து வருகிறார். எஸ்.பி.வேலுமணியே நேரடியாக முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிப்பதால் திமுக தரப்பும் சற்று அதிக உழைப்பைக் கொட்டத் தொடங்கியுள்ளது.

வலிமை

கைத்தறித்துறை அமைச்சரும் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான காந்தி, எஸ்.பி.வேலுமணிக்கு வருகைக்கு பிறகு முழுக்க முழுக்க மாவட்டத்திலேயே தங்கி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். ஒன்றியம் வாரியாக தினமும் அனைத்து நிர்வாகிகளிடமும் பேசும் இவர், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுத்தர வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறார். இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.