நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டேகால் கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இதுவரை எந்த நாடும் ஒரே நாளில் இவ்வளவு தடுப்பூசிகளை செலுத்தியதில்லை. இதற்காக முன்கூட்டியே தயார் நிலையில் இருந்த ஒன்றிய அரசு அனைத்து மாநிலத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது. செப்டம்பர் 17ஆம் தேதி அதிகப்படியான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

முன்னதாக தமிழக அரசு செப்டம்பர் 12ஆம் தேதி ஏற்கனவே ஒரு மெகா கேம்ப் நடத்தி ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செப்டம்பர் 17ஆம் தேதி மீண்டும் ஒரு மெகா கேம்ப் நடத்தப்படும் என்றார். அதாவது பிரதமர் மோடியின் பிறந்தநாளில். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் அந்த திட்டம் செப்டம்பர் 19ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டது.
செப்டம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தும் கர்நாடகா, நேற்று ஒரே நாளில் 27 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. தினமும் சராசரியாக 3 லட்சம் மட்டுமே செலுத்தும் குஜராத் நேற்றும் மட்டும் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறது. அதேபோல பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் சராசரியை விட 4 மடங்கு நேற்று அதிகமாக செலுத்தியிருக்கிறது.
ஆனால் இந்த மெகா கேம்ப் இல் தமிழக அரசு பங்குகொள்ளவில்லை. நேற்று வழக்கமான சராசரி அளவான 3 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே தமிழக அரசு செலுத்தியிருக்கிறது. இதனால் ஆரம்பத்தில் 17ஆம் தேதி மெகா கேம்ப் என்று அறிவித்த அமைச்சர் எதற்காக அதனை 19ஆம் தேதிக்கு மாற்றினார் என்ற கேள்வி எழுகிறது. நாடு முழுவதும் 2.25 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாடும் பங்கு கொண்டிருந்தால், 2.5 கோடியை எளிதில் தொட்டிருக்கலாம். ஆனால் தமிழ்நாடு அரசு அதனை செய்யவில்லை. ஏன் என்பது ஆட்சியாளர்களுக்கு தான் வெளிச்சம்.