108 திவ்ய தேசங்கள், பாண்டிய நாடு கோயில்கள்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரை.
சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.

அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ்வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.

ஆலய அமைப்பு


கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இடது புறம் மிகப்பெரிய திருப்பாற்கடல் தீர்த்தம். அதன் எதிரே, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் ஸ்ரீதேவி - பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 46-வது தலமாக விளங்குகிறது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது. பாண்டிய வளநாட்டில் தென்பகுதியில் அமைந்த ஊராக திருமோகூர் விளங்குகின்றது.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த தலம் இது.

ஆலய சிறப்பு


  • இத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

  • பொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.

  • வேண்டிய வரம் அருளும் நாதனாக, இத்தலத்தில் காளமேகப்பெருமாள் வீற்றிருக்கிறார். இருப்பினும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரே பக்தர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். நோய்கள், ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை என அனைத்து இடர்களும் நீங்கும் என்பதால், இந்த சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.