1965ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி (இந்திய-பாகிஸ்தான் போர்) இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர், ஐ.நா.வின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.


முக்கிய தினம் :-


புற்றுநோய் ரோஜா தினம்

புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டை சேர்ந்த 13 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1996ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவே அவர் இறந்த தினத்தை புற்றுநோய் ரோஜா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதன்மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு மனஉறுதி ஏற்படுகிறது.


ஒன்வெப்டே (OneWebDay)

ஒன்வெப்டே செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2006-லிருந்து கொண்டாடப்படுகிறது. சூசன் பி.கிராபோர்டு என்பவர் Internet Corporation for Assigned Names and Numbers(ICANN) என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். இவர் இணையதளத்தை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாளை உருவாக்கினார்.


உலக கார் இல்லாத தினம்

உலக கார் இல்லாத தினம் (கார் ஃபிரீ டே) ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் விதத்திலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் 1995-ல் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


மைக்கேல் ஃபாரடே

மின்சாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. இவர் மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார்.

உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படும் இவர் 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தன்னுடைய 75-வது வயதில் மறைந்தார்.


பி.பி.ஸ்ரீநிவாஸ்பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவருமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பி.பி.ஸ்ரீநிவாஸ்; 83-வது வயதில் (2013) மறைந்தார்.