கொரோனா பரவல்  காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் பீக் ஹவர்ஸில் பயணிக்க தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் என்ற விதி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;-  “சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும்  டிக்கெட் வழங்கப்படும். ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உத்தரவுக்கு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மின்சார ரயிலில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி  2 தவணை போட்டுக்கொண்ட சான்றிதழ் மற்றும் ஏதாவது ஒரு  அடையாள அட்டையை காண்பித்து அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய அங்கீகாரக் கடிதம், அடையாள அட்டை மற்றும் கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை டிக்கெட் வாங்கும்போது சமர்பிக்க தவறும் ஆண்களுக்கு (மாணவர்கள் நீங்கலாக) பீக் ஹவர்ஸில் பயணிக்க தடை தொடரும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.