கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி. உடன் அரக்கோணம் எம்.பி . எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா்.
கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தைரியமாகச் சொல்லி வாக்கு கேளுங்கள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது என திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வாக்குறுதி அளித்தாா்.

வாலாஜாபேட்டை ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். தற்போது திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் , கிராம மக்களின் அடிப்படை வசதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தைரியமாகச் சொல்லி வாக்கு கேளுங்கள். இந்த மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது என்றாா் அமைச்சா்.

இதையடுத்து அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.