ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விருப்பமுள்ள விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் கோருபவர்கள் மட்டும் வருகிற 10-ந் தேதி வரை அரசு தெரிவித்த ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்கள் மற்றும் உள்ளே, வெளியே இரு வழிகளை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை) இணைக்கப்பட வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரத்துடன் தற்காலிக உரிமத்தின் ஆணையினை இ-சேவை மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.