குழந்தைகள் தெரியாமல் சிறிய பொருட்களை விழுங்கும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இளைஞர் ஒருவர் கனமான பழைய நோக்கியா மாடல் செல்போனை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோசாவா நாட்டின் ஓல்டு பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்றுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தான் செல்போனை விழுங்கிவிட்டதாக கூறி மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் வயிற்றுப்பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் விழுங்கியது 2000ம் ஆண்டு வெளியான நோக்கியா 3310 மாடல் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் மூன்று பாகங்களாக இருந்த நோக்கியா போனை மருத்துவர்கள் அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அந்த நபர் நலமாக உள்ளார். அந்த இளைஞர் விழுங்கிய போனை ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் இருந்துள்ளதால் கடுமையான வயிற்று வலியை சந்தித்துள்ளார். 

தற்போது போனை அகற்றினாலும் பேட்டரியில் இருந்து வெளியேறிய அமிலம் வயிற்றில் கலந்திருப்பதால் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.