ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் நெல் அரவை பணிக்கு புதிய நெல் அரவை முகவர்களை நியமிக்க அரிசி ஆலையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிடங்குகளில் கூடுதலாக உள்ள நெல்லை அரைத்து கொடுத்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இணையாத தனியார் நெல் புழுங்கல் அரவை அரிசி ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஒரு முறை திட்டத்தின் கீழ் இணைந்து தனியார் அரிசி ஆலைகள் அரிசியை அரவை செய்து கொடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதனடிப்படையில் விண்ணப்பங்கள் வரப்பெற்ற ஆற்காடு வட்டம், திமிரி ஒன்றியம், கனியனூர் ஊராட்சியில் உள்ள ரங்கநாதன் நவீன அரிசி ஆலை புதிய நெல் அரவை முகவரை நியமித்திட அரிசி ஆலையின் வசதிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

அரசின் விதிமுறைகளின்படி பாடி பிரி கிளினர், மெக்கானிக்கல் டிரைவர், மாடர்ன் பாடி பாயிலிங் யூனிட், கோன் பாலிஷர், வொயிட்னர், கலர் ஸ்டோரேஜ், ஸ்டோரேஜ் குடோன், உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளது. நாளொன்றுக்கு 25 மெட்ரிக் டன் அரிசி அரவை செய்யும் திறன் கொண்டதாக உள்ளதா? என்று ஆலை உரிமையாளர் தெரிவித்தார்.

அப்போது, அரசின் அனைத்து விதிமுறைகளின்படி நவீன அரிசி ஆலை உள்ளதால் இதற்கு அனுமதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமிரி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் 393 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கும், 55 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 19 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பிரேமா, வேளாண்மைதுறை நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், பிடிஓக்கள் வெங்கடாசலம், ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ், தாசில்தார் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.