பனாமா லீக்ஸ், தி பாரடைஸ் லீக்ஸ்களுக்கு அடுத்தபடியாக தற்போது பண்டோரா ஆவணம் வெளியிடப்பட்டு உலக நாடுகளை உலுக்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் பணம் பதுக்கிய பிரபலங்களில் பெயர்கள் அடங்கிய பண்டோரா ஆவணம் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பனாமா, சைபரஸ் போன்ற பல வரி குறைவான, கட்டுப்பாடுகள் குறைவான நாடுகளில் பல்வேறு நாடுகளின் பிரபலங்கள் கோடி கோடியாக பணம் பதுக்கியது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தங்கள் நாடுகளில் வரும் வருமானத்தை மறைத்து, அதற்கு வரி கட்டாமல், அந்த வருமானத்தை பனாமா, சைபரஸ் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதுதான் இந்த பதுக்கல் ஆகும்.
வரி கட்ட விருப்பம் இல்லாமல், அரசை ஏமாற்றி வரி குறை-வாக உள்ள நாடுகளில் பல பிரபலங்கள் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய லிஸ்ட்தான் தற்போது பண்டோரா ஆவணமாக வெளியாகி உள்ளது. ஐசிஐஜே எனப்படும் The International Consortium of Investigative Journalists அமைப்பு இந்த பண்டோரா ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
பணத்தை மறைப்பார்கள்
பனாமா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல நிறுவனங்களிடம் இருந்து இந்த ஆவணங்களை ரகசிய நபர்கள் மூலம் ஐசிஐஜே கைப்பற்றி உள்ளது. பல பிரபலங்கள், முறைகேடாக வருமான ஈட்டும் அரசியல்வாதிகள், போதை பொருள் கும்பலின் தலைவர்கள், தேடப்படும் சில தீவிரவாத இயக்கத்தினர் கூட பணம் பதுக்கி உள்ளதாக இந்த ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நேர்மையாக பணம் சம்பாதித்த சிலரும் கூட வரி கட்ட விருப்பம் இன்றி வருமானத்தை மறைக்க இங்கு முதலீடு செய்துள்ளது பண்டோரா ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பனாமா?
இதற்கு முன்பே இதேபோல் தி பனாமா, பாரடைஸ் பேப்பர்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் வெளியாகி இருந்தது. இதற்கு முன் 2016, 2017ல் இந்த ஆவணங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை விட இது மிகப்பெரிய லீக் ஆகும். இதுவரை வெளியானதிலேயே இதுதான் மிகப்பெரிய லீக் ஆகும் . ஏனென்றால் பனாமா லீக் என்பது ஒரு நிறுவனத்தில் பணம் பதுக்கியவர்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டது.
எவ்வளவு ஆவணம்
இதில் தற்போது சில பக்கங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இன்னும் பல பக்கங்களை வரும் நாட்களில் தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெல்சி, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, பனாமா, பார்ப்டோஸ், சைப்ரஸ், துபாய், பஹாமாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், வியட்நாம் ஆகிய நாடுகளில் இவர்கள் முதலீடு செய்துள்ளனர். சர்வதேச விதிகளை பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்றபடி இவர்கள் பணத்தை இந்த நாடுகளில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு இழப்பு இருக்கும்?
தி கார்டியன் ஊடகம் இந்த முதலீடுகள் காரணமாக உலக அளவில் 5 கோடி கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி காட்டாமல் இவர்கள் பணம் பதுக்கியதால், அந்த வரி வருவாய் மட்டுமே 5 கோடி கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது சரியாக ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று இருந்தால் பள்ளிகள், வேக்சின், கொரோனா தடுப்பு பணிகளில் இது பயன்படுத்தப்பட்டு இருக்கும். மாறாக அரசை ஏமாற்றி பணக்காரர்கள் இந்த பணத்தை பதுக்கி, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏன் தவறு?
சிலர் நேர்மையான வழியில் வந்த பணத்தை கூட வரி கட்ட விருப்பம் இன்றி இங்கே பதுக்கி உள்ளனர். சச்சின் டெண்டுல்கர், பாப் பாடகி ஷகீரா, மாடல் கிளவுடியா, இத்தாலி டா லெல் தி பேட் ஒன், ஜோர்டான் மன்னர், உக்ரைன் அதிபர்கள், கென்யா, ஈக்குவேடார், செஸ் குடியரசு பிரதமர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ரஷ்ய அதிபர் புடின், உலகின் பல்வேறு நாடுகளில் 35 அரசியல் தலைவர்கள், 300க்கும் அதிகமான பிரபலங்கள் பெயர் இதில் முதல் கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.