கரோனா பரவல் காரணமாக இடை நின்ற 2 லட்சம் மாணவர்களில் 1.28 லட்சம் பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை நிலவு கிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆண்டு தோறும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் பல நலத் திட்டங்களால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இடைநிற்றல் குறைவாகவே உள்ளது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த 2019 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. ஆனாலும், கல்வித் தொலைக்காட்சி, இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. அதேநேரம், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் ஏராளமான குழந்தைகள் தங்கள் கல்வியை பாதியிலேயே கைவிட்டனர்.
இந்நிலையில், நடப்பு (2021-22) கல்வி ஆண்டில் 6- 19 வயதுடைய இடைநின்ற, மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறியும் பணிகள் கடந்த ஆக.10 முதல் செப்.20 வரை நடத்தப்பட்டன. இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் 'எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை நேரடியாக ஆய்வு செய்து, வீடு வீடாக கணக் கெடுப்பு நடத்தி, பள்ளியில் சேராத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இடைநின்றது தெரியவந்தது. வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடை நிற்றல் அதிகமாக இருந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெற்றோர், உறவினர்களைச் சந்தித்து பேசி, இடைநின்றவர்களில் 1.28 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எஞ்சிய மாணவர்களையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.