ஸ்டிக் இட்லி குறித்து கருத்து


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக் இட்லி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா. இரண்டு, மூன்று நாட்களாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதுதாங்க பார்க்க பால் ஐஸ் மாதிரியே இருக்கும் குச்சி இட்லி. கூடவே சட்னி, சாம்பார்.

இந்தப் புகைப்படத்தைப் பகிரும் சிலர் ச்சே என்ன ஒரு டிசைன் என்றும், இன்னும் சிலர் இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாதுன்னு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இட்லி புகைப்படம் இப்படியாக வைரலாக அது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா. மகிந்திரா கார் நிறுவனத் தலைவரான ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் ஆக்டிவாக இயங்குபவர். அதைவிட ட்ரெண்டிங்கில் டைமிங்கில் கருத்துகளைத் தெரிவித்து தனக்கென ஃபாலோயர்ஸ் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டரில் இந்த வித்தியாச இட்லி பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார்.

"பெங்களூரு, இந்தியாவின் க்ரியேட்டிவிட்டி கேபிடல் எப்போதும் அதன் புதுமையான படைப்புகளை பஞ்சமில்லாமல் வாரி வழங்கும். அதுவும் யாரும் எதிர்பார்க்காத விஷயங்களில் புத்தாக்கத்தை புகுத்தி கவனம் ஈர்க்கும். அதிலொன்றுதான் இந்த ஸ்டிக் இட்லி. இதை எதிர்ப்பவர்களும் இருக்கலாம். ஆதரிப்பவர்களும் இருக்கலாம்" என்று ஆனந்த் மகிந்திரா ட்வீட் செய்திருந்தார்.

இதனைப் பார்த்த ட்விட்டராட்டிகள், இட்லியை வெறும் கையில் சட்னி, சாம்பாரில் முக்கி சாப்பிடுவதுதான் உண்மையான பாரம்பரியம், ஆனால் எப்போதும் புதுமைகளை வரவேற்போம் என்று பதிவிட்டுள்ளனர்.

கவனம் ஈர்க்கும் ஆனந்த் மகிந்திரா:


ஆனந்த் மகிந்திரா ட்வீட்கள் ஒவ்வொன்றுமே கவனம் ஈர்க்கும் ரகம். கேரளாவில் பெருமழை வெள்ளம்பாதித்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தனது தோளைக் கொடுத்து பெண் ஒருவர் படகில் ஏற உதவினார். அந்த மீனவர் குறித்த செய்தி வைரலாக அவரைக் கண்டறிந்து அவருக்கும் அப்போதுதான் சந்தைக்குப் புதிதாக வந்திருந்த மகேந்திராவின் மாராஸோ காரை பரிசாகக் கொடுத்தார்.

கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு சொந்த வீடு வழங்கியவர்தான் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.

ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார். அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்த வகையில் தற்போது அதே மாதிரியாக வீடியோ ஒன்றை அண்மையில் அவர் பகிர்ந்தார். அது தோசை பற்றிய வீடியோ. தெருவோரக் கடை தோசை மாஸ்டரின் கைவண்ணத்தைப் பார்த்து வியந்து, இவரிடம் ரோபோக்கள் கூட வேகத்திலும் நேர்த்தியிலும் தோற்றுவிடும் போல. மேலும், இந்த வீடியோவைப் பார்த்தாலே பசிக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

அன்று தோசை வீடியோ பகிர்ந்த அவர் இன்று இட்லி ஃபோட்டோவைப் பகிர்ந்துள்ளார்.