அரக்கோணத்தில், வீட்டில் கதவு உடைத்து பணம் , பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( 40 ). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் , நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் சோளிங்கருக்கு சென்றார். நேற்று அதிகாலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

உடனே ராஜேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 35 ஆயிரம் மதிப்பு டிவி , 70 ஆயிரம் மதிப்பு மொபட் மற்றும் பீரோவில் இருந்த 2 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஷ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் , போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். 

இதேபோல் ஆற்காடு அடுத்த புதுப்பாடி இலுப்பை ரோடு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் ( 28 ). இவர் அதேபகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கிரீல் கதவு மற்றும் ஷட்டர் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த 24 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. அடகு வைக்கப்பட்ட நகைகள் லாக்கரில் பத்திரமாக வைக்கப் பட்டதால் தப்பியது. 

இதுகுறித்து ராஜசேகர் ஆற்காடு தாலுகா போலீசில் நேற்று புகார் செய்தார் . அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் , சப் - இன்ஸ்பெக்டர் செந் தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . 

மேலும் தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார் . 

வேலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர் . தொடர்ந்து போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர் .