திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் குமார், ரெயில்வே ஊழியர்.

இவர் சம்பவத்தன்று திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் நடைமேடையில் பயணிகள் உட்காரும் இருக்கையில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்து விட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் ஏறி சென்றுள்ளார். இத கவனித்த அபிஷேக் உடனே இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் அந்த வாலிபரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து செல் போனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.