பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சற்று குறைந்த உடன் மற்ற நாடுகள் தற்காலிகமாக கட்டுப்பாடுகளை தளர்த்த முயன்றாலும், கடுமையான எல்லை மூடல்கள் மற்றும் ஊரடங்கு நடைமுறைகளுடன் சீனா இடைவிடாத பூஜ்ஜிய கோவிட் அணுகுமுறையை பராமரித்து வந்தது. இதனால் ரோனா பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்தது.
ஆனால் சீனா தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகமான தொற்று பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலும் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது.

விமானங்கள் ரத்து

சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் சமீபத்திய கொரோனா பரவல் சுற்றுலாப் பயணிகளின் குழுவில் இருந்த ஒரு வயதான தம்பதியர் காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் ஷியான், கன்சு மாகாணம் மற்றும் உள் மங்கோலியாவுக்கு பறப்பதற்கு முன் ஷாங்காயில் பயணத்தை தொடங்கினர். தலைநகர் பெய்ஜிங் உட்பட குறைந்தது ஐந்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் நெருங்கிய தொடர்புகளுடன் டஜன் கணக்கான கேஸ்கள் அவர்களுடைய பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா தளங்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த சீன அரசு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. அத்துடன் பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் என கொரோனா பாதித்த பகுதிகளில் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதித்த ஊர்களில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது மேலும் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவும் கடுமையாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுளளன.

மக்களுக்கு அறிவுறுத்தல்

வடமேற்கு சீனாவில் சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நகரமான லான்சோ உள்ளிட்ட சில பகுதிகளில் குடியிருப்பாளர்களை வெளியேற வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மீறி வீட்டை விட்டு வெளியே வர விரும்பினால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

60 சதவீதம் ரத்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமான கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. சியான் மற்றும் லான்சோவில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் சுமார் 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்களன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், உள் மங்கோலியாவில் உள்ள எரென்ஹாட் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

உயரும் கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ரஷ்யா இறங்கி வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு ரஷ்யாவில் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டிருக்கிறார். ' ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.' என்று புதின் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. முதலில் அங்குள்ள மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. தற்போதுதான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கிறார்கள்.