ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (42). இவருக்கு திருமணமாகி காசி அம்மாள்(40) என்ற மனைவியும் தர்ஷினி(10) என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இவர் ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் பொது நிர்வாகத் துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை க்ரையின் எந்திரத்தில் இருந்து இரும்பு வேட்டுக்களை கீழே இறக்கும் போது எதிர்பாராதவிதமாக இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் வேலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏழுமலை உயிரிழப்பு காரணம் பொதுத்துறை நிறுவனத்தின் பாதுகாப்பின்மை அஜாக்கிரதை எனக் கூறியும் அவரது சாவுக்கு நியாயம் கேட்டும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தொழிற்சாலை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.