வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 36.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ. 900க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. 

இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை மாற்றப் படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (அக்டோபர்) காஸ் சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. 

அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது. இதனால்,சென்னையில் ரூ. 900.50 ஆகவும் சேலத்தில் ரூ. 918.50ல் நீடிக்கிறது.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது கடந்த மாத விலையில் இருந்து ரூ. 36.50 அதிகரித்து அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ. 1831க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ. 36.50 அதிகரித்து, ரூ. 1867.50 ஆக உயர்ந்துள்ளது.