ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வசதியாக தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்துடன் கூடிய விடுமுறை


இதுகுறித்து, வேலூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்-1 இணை இயக்குநர் முகம்மதுகனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், கட்டிட மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.

புகார் எண் வெளியீடு


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தேர்தல் விடுமுறை குறித்த புகார்கள் ஏதாவது இருந்தால் 0416-2904953 அல்லது 0416-2254575 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவித புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் விடுமுறை அளித்து ஆதரவளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.