நவல்பூர் பகுதியில் ஐந்து வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நுற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதிக்கான மேல்நீர்தேக்க தொட்டி ஒன்றுக்கு வரும் பிரதான குழாய் சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்து விட்டது. 
நவல்பூர் ரயில்வே மேம்பால பணிக்காக மின்சார கம்பங்களை மாற்றி அமைக்கும்போது தவறுதலாக இந்த பைப்லைன் உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நவல்பூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை.

இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் காந்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டாங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நவல்பூர், மணியக்கார தெரு, எம்பிடி சாலை, மந்தைவெளி தெரு, கிரேட் நகர் பகுதிகளுக்கு நேற்று தனியார் தண்ணீர் டாங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

பைப்லைனை சீரமைக்கும் பணியை விரைவில் முடித்து தங்களுக்கு நகராட்சி குழாய் மூலம் தண்ணீர் சப்ளை வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.