பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கும் பொருட்டு 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

கரோனா

கரோனா காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டதால் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித் துறை 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டத்தை கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியா குமரி,கிருஷ்ணகிரி, மதுரை, நாகப் பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12மாவட் டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, தன்னார் வலர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆடல், பாடல், பொம்மலாட்டம் மூலம் பாடம் மற்றும் பாடம் சார்ந்த விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.

தன்னார்வலர்களாக பணியாற்ற இணையதளம் மூலம் பதிவு 

அதேபோல், இந்தத் திட்டத்தில் இணைந்து தன்னார்வலர்களாக பணியாற்ற illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த புதிய இணையதளத்தையும், விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

அன்பில் மகேஸ்

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: இந்த திட்டம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஒருபிரிவாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் இனிமையான முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும்.

திட்டத்தை முதல்வர் நவம்பர் மாதம் தொடங்கி வைப்பார்

இந்தத் திட்டம் மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் மூலமாகவும், மாவட்ட அளவில் ஆட்சியர்கள் மூலமாகவும், வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூலமாகவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். மேலும் பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோரும் கண் காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு கற்றல் மையத்தில் தினமும் மாலை நேரத்தில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பாடம் நடத்தப்படும். ஆறு மாதம் நடைபெற உள்ள இந்தத் திட்டத்தை முதல்வர் நவம்பர் மாதம் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் தொடங்கி வைப்பார் என்றார். இவ்விழாவில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் காகர்லா உஷா, எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் இரா.சுதன், கூடுதல் திட்ட இயக் குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந.லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வயதுவரம்பு தளர்வு

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறும்போது, "ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட உள்ளது. வெகு விரைவில் அரசாணை வெளியாகும்" என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணை நேற்று இரவே வெளியானது.