‘புதிய நகர்ப்புற இந்தியா’ விரைவில் உருவாகும் !
புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் நம் நாட்டை படிப்படியாக ‘புதிய நகர்ப்புற இந்தியாவாக’ மேம்பட செய்யும் என பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

லக்னோ,

‘ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா : 

நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றுகிறது’ என்னும் தலைப்பில் இன்று லக்னோவில் நடைபெற்ற மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களை சேர்ந்த 75 ஆயிரம் பயனாளர்களுக்கு நகர்ப்புற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி வழங்கினார். மேலும் இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறியதாவது;-


நகர்ப்புற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 8 லட்சத்து 80 ஆயிரம் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 80% சதவீதம் வீடுகளின் உரிமையாளர்களாக பெண்கள் உள்ளனர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

2014ம் ஆண்டுக்கு பின், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றுள் 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் ஏழைகளின் வங்கிக்கணக்கில் போடப்பட்டுள்ளது.

ஏழைகளின் மிகப்பெரிய கனவாக இருப்பது தங்களுக்கென ஒரு சொந்த வீடு கட்டுவது. அதற்காக, ஏற்படுத்தப்பட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர் என கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தில் 75 நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும், ஃபேம்-2 திட்டத்தின் கீழ் லக்னோ, கான்பூா், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூா், ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 7 நகரங்களில் 75 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகத்தின் 75 திட்டங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் அவா் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அங்கு பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:-


புதிதாக தொடங்கப்பட்ட நகர்ப்புற ஸ்வச் பாரத் - 2.0 மற்றும் அம்ருட் - 2.0 திட்டங்கள் நம் நாட்டை படிப்படியாக ‘புதிய நகர்ப்புற இந்தியாவாக’ மேம்பட செய்யும்.

தீபாவளி திருநாளன்று அயோத்தியில் 7.5 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும்.கடந்த 7 ஆண்டுகளில் கட்டப்பட்ட 9 லட்சம் வீடுகளும் சேர்ந்து 2 லட்சம் விளக்குகள் ஏற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முறையில், இந்தியா சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த 3 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் 6 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன எனவும் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் 2500 கோடி ரூபாய் தெரு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6-7 வருடங்களில் நகர்ப்புறங்களில் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டின் 70க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் அடிப்படையாக தொழில்நுட்பம் உள்ளது.நகர்ப்புற நடுத்தர மக்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை தீர்ப்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இப்போது 70% சதவீதம் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.இந்தியாவில் பலவகை இணைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகும் என கூறினார்.