பாணாவரம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்டோபர் 4ம் தேதியிலிருந்து 9ம் தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ம் தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மதுபானங்களை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பாணாவரம்-நெமிலி சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 411 டாஸ்மாக் மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அரசு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க மொத்தமாக வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (70), பாணாவரம் நெமிலி ரோட்டை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 52 ஆயிரம் என கூறப்படுகிறது.