கலெக்டர் ஆய்வு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் வழங்குதல் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், இதர பொருள்கள் அனுப்பி வைக்க தயாா்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாலாஜா உள்ளாட்சி தேர்தல்


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், வாலாஜா ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலில் 297 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 36 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 20 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 1 பகுதி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 240 வாக்குச்சாவடி மையங்களில் வரும் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

பாஸ்கர பாண்டியன் ஆய்வு


இந்த தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் வேண்டி இதுவரை கிடைக்கப்பெற்ற 375 விண்ணப்பங்களுக்கு தபால் வாக்குகள் அளித்திட படிவங்கள் தயாா்படுத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பண்டியன் பாா்வையிட்டாா். மேலும், வரும் 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்னா் வரை தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் உள்ள வாக்குப் பெட்டியில் செலுத்தலாம் எனத் தெரிவித்தாா்.

வாக்கு பெட்டிகளின் நிலை ஆய்வு


இதைத் தொடா்ந்து, 240 வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டு செல்ல வாக்குப் பெட்டிகள் தயாா்படுத்தும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். ஒவ்வொரு பையிலும் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள 72 பொருள்கள் சரிபாா்த்து வைக்கப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.