🚩ஸ்ரீகாளஹஸ்தி


சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.

🚩கீழப்பெரும்பள்ளம்


மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இததலத்தை அடையலாம்.மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

🚩திருநாகேஸ்வரம்


கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும் பிறையணிவாணுதலாள் அம்மனையும் இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி தோஷம் நீங்கப் பெறலாம்.

🚩கும்பகோணம்


நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரும், பெரியநாயகியும் தோஷம் விலக்கி நன்மை அருள்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

🚩பாமணி


மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகநாதரும் (சுயம்பு லிங்கம்) அமிர்தநாயகியும் அருள்புரிகிறார்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்றும் இத்தலத்தை அழைப்பர்.

🚩திருப்பாம்புரம்


கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசிக்க தோஷங்கள் எல்லாம் விலகி ஓடுகின்றன. ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

🚩ஸ்ரீவாஞ்சியம்


கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

🚩நாகூர்


நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார்.நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.

🚩பேரையூர்


புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

🚩நயினார்கோவில்


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.

🚩நாகமுகுந்தன்குடி


சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது, இந்த ராகு-கேது தோஷ நிவர்த்தித் தலம்.

🚩நாகப்பட்டினம்


காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.

🚩குன்றத்தூர்


சென்னையை அடுத்து, பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக அருள்பாலிக்கும் நாகேஸ்வரர் சர்ப்ப தோஷங்களை நீக்கி ஆனந்தம் அளிக்கிறார்.

🚩கெருகம்பாக்கம்


சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் உள்ளது கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும், பக்தர்களுக்கு தோஷம் விலக்கி அருள்கின்றனர்.

🚩கோடகநல்லூர்


திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்; பக்தர் தம் துயர் துடைக்கிறார்.
            

🚩திருக்களாஞ்சேரி


மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் நாகநாதர் சுயம்புலிங்கமாக அருள்பரப்பி தோஷ பயம் நீக்குகிறார்.

🚩ஆம்பூர்


வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி, நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவியும், இறைவனும் அருள்பாலிக்கின்றனர்; பக்தர் நலம் காக்கின்றனர்.

🚩பெத்தநாகபுடி


திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரர், தன்னை தரிசிக்கும் பக்தர்களை எல்லாத் துயரிலிருந்தும் விடுவிக்கிறார்.

🚩திருக்கண்ணங்குடி


திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கம். காளத்தீஸ்வரர் என்று திருப்பெயர். நல்வாழ்வளிக்கும் தெய்வம்.

🚩ஊஞ்சலூர்


ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருந்து, அரவக் குறைகளை அகற்றுகிறார்.

🚩காஞ்சிபுரம்


பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகு-கேது பூஜித்த தலம் இது.