தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மீது அதிமுக துணைகொரடா ரவி பகிரங்க குற்றச்சாட்டு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக துணைகொரடாவும், எம். எல். ஏவுமான ரவி செய்தியாளுக்கு பேட்டியளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் துணைக்கொரடாவும், அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான ரவி, ராணிப்பேட்டை அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திமுக வேட்பாளர்களின் பெயர்களை கொடுத்து அவர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து சில அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அதிமுக துணை கொரடா ரவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதற்காக வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகளை உடனடியாக அறிவிக்காமல் காலம் தாழ்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியர் கூறியதாக தெரிவித்தார். எனவே ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை தமிழக தேர்தல் ஆணையம் உடனடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட ஆட்சியரை போல செயல்படுகிறார் அவர் தலைமையில் நடைபெறும் தேர்தல் என்பது ஜனநாயகப் படுகொலை என கடுமையாக விமர்சித்தார். அப்போது மாவட்ட பொருளாளர் சாபுதீன் , சம்பந்தன் நகர செயலாளர் கேபி சந்தோசம் ஆகியோர் உடன் இருந்தனர்