ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான கண்காணிப்பு கூட்டம் நேற்று நடந்தது. 

இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: 

மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை உழவர் சந்தைகளுக்கு புதிய விவசாயிகள் வருவதை துரிதப்படுத்த வேண்டும். உழவர் சந்தை வளாகத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க நபார்டு வங்கி மேலாளருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகளின் தேவை மற்றும் வழங்கல் குறித்து ஆராய்ந்து அதற்கேற்ப உற்பத்தியை பெருக்குவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

10ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் இந்தஆண்டு நிறுவப்பட்ட 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்குதொகையினை உறுப்பினர்களிடம் இருந்து விரைந்து திரட்டி வணிக ரீதியான செயல்பாடுகளில் நிறுவனத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து, பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட்டத்தில் பயனடைந்த 2 பயனாளிகளுக்கு 13.35 லட்சம் வங்கிக்கடனுக்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து, நெமிலி அக்ஷயமருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்களுக்கு பங்குச் சான்றிதழ் மற்றும் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை மேற்கொள்ளும் புதிய விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், கலெக்டர் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதா, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சீனிராஜ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஆனந்தன். இந்தியன் வங்கி முன்னோடி மேலாளர் அலியம்மா ஆபிரகாம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.