ராணிப்பேட்டை மாவட் டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 7 ஒன்றியங்கள் உள்ளது. இங்கு, 47 கால்நடை மருத்துவமனைகள் உள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 2லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள், 40,000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட கோழிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வளர்த்து வருகின்றனர். 

டாக்டர்கள் பற்றாக்குறை

இந்நிலையில், கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள கால் நடை மருத்துவமனைகளுக்கு ஆடு மற்றும் மாடுகளை அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். அதுபோல் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்றால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், உரிய சிகிச்சை அளிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் விவசாயிகள், பொதுமக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இதனால், மாவட்டம் முழுவதும் கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள் ளாகி வருகிறது. மேலும், உரியநேரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் உயிரிழப்புகளும் அடிக்கடி நிகழ்கிறது.

கால்நடை மருத்துவமனை

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் 47 கால்நடை மருத்துவமனைகளில் தற்போது 22 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 25 டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதேபோல், 47 கால்நடை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தற்போது 12 பேர் மட்டுமே வேலை செய்துவருகின்றனர். மீதமுள்ள 35 பணியிபணியிடங்களில் ஆய்வாளர்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் கோரிக்கை 

இனிவரும் காலங்களில் விவசாயிகளின் வாழ்வை செழுமை ஆக்குவதற்கும், கால்நடைகளை பராமரிப்பதற்காகவும், நோய்களிலிருந்து அவற்றைக் காக்கும் பொருட்டு அரசு, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பற்றாக்குறையாக உள்ள டாக்டர்கள் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.