மரத்தில் பைக் மோதி இறந்த ராணுவ வீரர் அஜித் குமார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழநி. இவரது மகன் அஜித் குமார்(26), ராணுவவீரர். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.

தனது சொந்த ஊரில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதைப் பார்ப்பதற்காக ஒருமாத விடுமுறையில் 4 நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் அருகே உள்ள புலிவலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நள்ளிரவில் திரும்பியுள்ளார். அப்போது ஆயல் கிராமத்தின் அருகே எட்டுக்கண் வாராவதி அருகே வரும் போது நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி புதரில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்துள்ளார். நேற்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் மது பாட்டில்கள் சேகரிக்க சென்றபோது புதரில் இறந்துகிடந்த குமாரை பார்த்து பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வரதராஜன், ராமதாஸ் உள்ளிட்ட போலீ சார் விசாரித்து வருகின்றனர்.