சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக பொதுமக்களிடத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பர் மாதம் முழுவதும் நடந்தது.

மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியான, மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவு திருவிழா நிகழ்ச்சி இன்று ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம், சந்தை அருகில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இதில் சுமார் 120 பாரம்பரிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உணவு தயாரிப்பில் சமையலறையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவை இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் 120 பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறை விளக்கமும், இதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் பயன்களும் கண்காட்சியில் விளக்கப்பட்டது.

ஊட்டச்சத்து உணவு தயாரித்தல் போட்டியில் சிறப்பாக உணவுகளை தயாரித்த ஆற்காடு வட்டாரத்திற்கு முதல் பரிசும், காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்கு 2-ம் பரிசும், வாலாஜா வட்டாரத்திற்கு 3-ம் பரிசையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வாசுகி, கிரிஜா, அன்பரசி, தேன்மொழி, ஷாலினி, பகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், உதவியாளர் சவிதா மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.