ஓட்டுக்கு பணமோ, பொருளோ வாங்கமாட்டோம், பணம் கொடுத்து எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என்று ஆற்காடு அருகே மலைகிராம மக்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.


பணம், பொருள் வாங்கமாட்டோம்


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியாலத்தை அடுத்து குறிஞ்சி நகர் பகுதி உள்ளது. மலை கிராமமான இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 80-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன. இந்தப்பகுதி நந்தியலம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு ஆகும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளையும் (புதன்கிழமை), 9-ந் தேதியும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரிடமும் ஓட்டுக்கு பணமோ, பொருளோ வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவெடுத்து தங்கள் வீட்டுச் சுவரில் நோட்டீஸ் அச்சடித்து ஓட்டி உள்ளனர். அதில் வேட்பாளரிடம் ஓட்டுக்கு பணம், பொருள் வாங்க மாட்டோம். பணம் கொடுத்து எங்களை சிறுமைப் படுத்தாதீர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

கேள்வி கேட்டும் உரிமை


ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர் நமக்கு பழக்கமானவராக அல்லது நெருக்கமானவராக தான் இருப்பார்கள். அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு செலுத்தினால் அவர்கள் தங்களுக்கு வேண்டிய எந்த ஒரு நல்ல திட்டமும் செய்யாமல் அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்பட்டு ஊழலில் ஈடுபடுவார்கள்.

எங்களுக்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறோம். இருப்பினும் பணம் வாங்காமல் நல்ல ஒரு நபருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச்செய்தால் எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் அவர் தானாகவே செய்து தருவார். அப்படி செய்து தராத பட்சத்தில் அவரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.