ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


வாக்காளர் பட்டியல் திருத்த பணி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.22-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 1.11.21-ந்‌ தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 30.11.21-ந் தேதி வரை அனைத்து அரசு அலுவலக வேலை நாட்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாக்குச்சாவடி அமைவிடங்களில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியரை மைய அலுவலர்களாக நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி ‌அமைவிடங்களில் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலகமாக இருக்கும்பட்சத்தில் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை வாக்குச்சாவடி மைய அலுவலர்களாக பணி நியமனம் செய்து அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மூலமாக ஏற்கனவே ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்க்க, நீக்க...

இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள மைய அலுவலர்கள் அவர்களுக்கான அமைவிடங்களில் சிறப்பு சுருக்க திருத்த காலங்களான 1.11.21-ந் தேதி முதல் 30.11.21-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் அந்தந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாடவேளை தவிர்த்து மற்ற நேரங்களில் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு முகாம் நாட்களான 13, 14, 27, 28.11.21 -ந் தேதி (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் படிவங்களை பெறும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மையத்திலிருந்து இது தொடர்பாக எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணி பாதிக்காத வகையில் இப்பணியினை செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.