வாலாஜா டோல்கேட் அருகே டீக் கடை நடத்தி வருபவர் எல்லப்பன். இவர் தனது கடை அருகே நேற்று முன்தினம் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் பைக்கை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து அவர் வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் பைக்கை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், பைக்கை திருடியது அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோனீஷ்குமார் ( 18 ) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரது வீட்டில் பதுங்கியிருந்த மோனீஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் வாலாஜா டோல்கேட்டில் எல்லப்பன் பைக்கை திருடியதாக ஒப்புக்கொண்டார். மேலும் கடந்த வாரமும் ஓரிடத்தில் பைக் திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனிஷ்குமாரை கைது செய்து 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.