அரக்கோணம் யூனியனுக்கு உட்பட்ட கோணலம், மூதுார், வீரநாராயணபுரம், வேலுார்ப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. ஒன்றிய பாஜ விவசாய அணி தலைவர் ஷியாம்குமார் தலைமை வகித்தார்.

முன்னாள் ஒன்றிய பாஜ தலைவர் ரமேஷ், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கிளைதலைவர்கள் அர்ஜூனன், தணிகாசலம் முன்னிலை வகித்தார். 

கோணலம் பஞ்., தலைவர் லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இணைந்து ஏரிக்கரையின் இருபுறமும் பனை விதைகளை நட்டனர்.

இதுகுறித்து பாஜவினர் கூறுகையில் கடந்த ஒரு மாதமாக ராஜாபாளையம், வளர்புரம் உள்ளிட்ட பல ஊர்களில் பனை விதைகளை சேகரித்தோம். பனை மரங்கள் ஏரிக்கரையை பலப்படுத்தும், நீர்மட்டத்தை அப்படியே வைத்திருக்கும் என்பதால் பனை விதைகளை நடுகிறோம். மொத்தம் 25 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றனர்.