ராணிப்பேட்டை அப்பல்லோ டியூப்ஸ் அண்டு ஸ்டீல் நிறுவன தொழிலாளர்கள் சம்பளம், பிஎப் ஆவணங்களை தொழிலாளர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் இந்துமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் அப்பல்லோ ட்யூப்ஸ் அண்டு ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வைப்புநிதி நிலுவைத் தொகை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 1995-96, 1996-97, 1997-98 ஆகிய ஆண்டுகளில் தொழிலாளர்களின் சம்பள ரசீது உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலனை செய்து வேலூர் மண்டல தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட ஆண்டுகளுக்கான சம்பள ரசீது, பி.எப் ரசீது மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை ‘தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிடம், ஐ.டி.ஐ வளாகம், என்.எச்.46, அம்மன் நகர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம், வேலூர்-632010’ என்ற முகவரியில் வரும் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.