Coronavirus: B.1.1529 mutanat from South Africa spreads fast, Many countries closes borders


புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. உலக மக்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் பரவும் இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

ஹாங்காங், போட்ஸ்வானா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 30 கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆல்பா, பீட்டா, மியூ, காமா போன்ற பல்வேறு வகை உருமாறிய வைரஸ்களில் காணப்பட்ட மாற்றம் இதிலும் காணப்படுகிறது. P681H, N679K, N501Y போன்ற உருமாற்றங்கள் இதிலும் உள்ளது.


மாற்றம்

இந்த புதிய வகை மாற்றங்கள் காரணமாக ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் தினசரி கேஸ்கள் 10 மடங்கு உயர்ந்து உள்ளது. இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்றும் ஆபத்தானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதோடு B.1.1529ல் ஏற்பட்டு இருக்கும் சில மாற்றங்கள் மக்களிடம் இருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் கொரோனா வேக்சின் போட்டவர்களையும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் கூட இந்த B.1.1529 வகை தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தினசரி கேஸ்கள்

இந்த நிலையில்தான் B.1.1529 காரணமாக பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஒருவருக்கு B.1.1529 கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதனால் லோக்கல் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர் மாலவியில் இருந்து இஸ்ரேல் வந்த பயணி ஆவார். அங்கு இந்த புதிய கேஸ் காரணமாக மொத்த நாட்டிற்கே எமர்ஜென்சி கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


யு.கே

B.1.1529 குறித்து கேள்விப்பட்டதும் யு.கேவில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழ், கட்டாய 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் B.1.1529 பரவி உள்ள மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இதே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


இத்தாலி

இத்தாலியில் இதைவிட கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளின் பயணிகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா அல்லது சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஜெர்மனி

அதேபோல் ஜெர்மனி தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பா யூனியன் நாடுகள் தனிப்பட்ட வகையில் இதே தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்க பயணிகளுக்கு மற்ற அண்டை நாடுகளிலும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிங்கப்பூர்

ஆப்ரிக்காவில் உள்ள 7 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த நாடுகளுக்கு சென்றுவிட்டு சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் அல்லது குடிமக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதேபோல் தென்னாபிரிக்க விமான நிலையங்கள் வழியாக டிரான்சிட் விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கும் சிங்கப்பூர் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பா

யு.கேவை போல ஸ்காட்லாந்திலும் ஆப்பிரிக்காவில் இருந்து வர நெகடிவ் சான்றிதழ், 10 நாள் கட்டாய தனிமை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் காரணமாக மொத்தமாக ஐரோப்பா யூனியனுக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. ஆசியாவில் ஹாங்காங்கில் B.1.1529 பரவி உள்ளதால் இந்தியாவிலும் விரைவில் இந்த பயண கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது.